வீட்டுக்குள் தமிழை அரியணை ஏற்றுவோம்

  • மூலம் கேதீஸ்வரி இரஞ்சன்
  • 27 மார்., 2024

கேதீஸ்வரி இரஞ்சன்

'உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்பது பொருள்' என்கிறது பிரான்சியப் பழமொழி. கனடா நாடு எமது மொழிக்கு சிறந்த அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது. இருப்பினும் எம்மவர் பலர் தமிழ் மொழியைப் பேசவோ, கற்கவோ விரும்புவதில்லை. ஒரு இனம் தலைநிமிர அதன் மொழியே காரணம். ஒரு மொழி செம்மொழியாகப் போற்றப்பட அதன் இலக்கிய இலக்கண செழுமையே காரணம். செம்மொழி நிலைபெற்ற மொழிகளில் ஒன்று எமது தாய்மொழி தமிழ் ஆகும். 'தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றார் பாரதி. பாரதியின் கனவு நனவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வீடுகளில் தமிழ் இல்லாது போய்க் கொண்டிருக்கின்றன. எமது அடையாளங்களை, பண்பாட்டை விட்டுக்கொடுக்க நாம் தயாராகிவிட்டால் அது எமது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பது போன்று ஆகிவிடும்.

கனடாவில் இருக்கும் தமிழ்ப் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தமிழ் கற்கின்றனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படியாயின் மூன்றில் இரண்டு மடங்கு பிள்ளைகள் எம் உயிரினும் மேலான எமது தமிழ் மொழியை எவ்வாறு காப்பர்?

கனடாவில் இருக்கும் தமிழ்ப் பெற்றோர்களில் 75 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து கனடாவிற்கு வந்தவர்கள். எங்கள் காலத்திலேயே வீட்டில் தமிழ் இல்லை என்றால் எதிர்காலத்தில் எப்படி தமிழ் வீட்டில் இருக்கும்?

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்தமொழி எம் தமிழ் மொழி' என்ற பெருமைகளை எல்லாம் நாம் இழக்கத் தயாராகி விட்டோமா?

வீட்டினுள் தமிழை முழுiயாக கொண்டு வருவதற்குச் சில வழிமுறைகளைப் பார்ப்போம். தமிழ்க் கல்வியைச் சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு வழங்குதல், தமிழ்க் கதைகளைக் கூறி நீதிநெறிகளைக் கூறுவது, தமிழ் நூல்களை வாசிக்க வைத்தல், தமிழ் பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுதல், தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க வைத்தல், உறவுமுறைகளைத் தமிழில் அழைக்கப் பழக்குதல், தினமும் உண்ணும் காய்கறி, பழங்களின் பெயர்களை தமிழில் சொல்லிக் கொடுத்தல், குழந்தைகளிற்குத் தூய தமிழ்ப் பெயர்களை வைத்தல், தமிழில் நடக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற வைத்தல், வீட்டில் உள்ள அனைவரும் தமிழில் மட்டுமே கதைக்க வேண்டும் என கட்டளை இடுதல், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது எமது அடையாளம் என்பதைப் புரிய வைத்தல் போன்றன மூலம் தமிழை வீட்டினுள் கொண்டு வரலாம்.

'தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்' என்றார் கவிஞர் காசி ஆனந்தன். தமிழுக்கும் எமக்குமான உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாக இருக்கின்ற போது தமிழை வெறுப்பது உங்கள் தாயை வெறுப்பது போல் உள்ளது. தாய்மொழியைக் காப்பாற்ற முடியாமல் போனால் நாமும் தொலைந்துவிடுவோம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என எவ்வாறு நாம் வாழக் கூடாது என்றும் எமக்குக் கற்பித்த எமது தமிழ் மொழியை எமது எதிர்காலச் சந்ததிக்கு இல்லாமல் செய்துவிடாதீர்கள். ஒரு மனிதனின் மாற்றம் ஒரு குமுகத்தின் மாற்றத்திற்கு வித்திடும். ஒரு குமுகத்தின் மாற்றம் ஒரு இனத்தின் மாற்றத்திற்கு வித்திடும். எனவே தமிழை என்றென்றும் வாழ வைப்பது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். அதற்கான முதற்படியாக வீட்டினுள் விருப்புடன் தமிழை அரியணை ஏற்றுவோம்.

ஆக்கம்: கேதீஸ்வரி இரஞ்சன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

Show More